![](pmdr0.gif)
nantikkalampakam
(author not known)
(in tamil script, unicode format )
நந்திக் கலம்பகம்
Etext input & Proof-reading: Mr. N.D. Logasundaram & his daughter Ms. Selvanayagi, Chennai, Tamilnadu, India
web version: Mr. N.D. Logasundaram, Chennai, Tamilnadu.
This webpage presents the Etext in Tamil script but in Unicode encoding.
To view the Tamil text correctly you need to set up the following:
i). You need to have Unicode fonts containing Tamil Block (Latha,
Arial Unicode MS, TSCu_Inaimathi, Code2000, UniMylai,...) installed on your computer
and the OS capable of rendering Tamil Scripts (Windows 2000 or Windows XP).
ii)Use a browser that is capable of handling UTF-8 based pages
(Netscape 6, Internet Explorer 5) with the Unicode Tamil fontchosen as the default font for the UTF-8 char-set/encoding view.
.
or
© Project Madurai 1999 - 2003
nantikkalampakam
(an old work on the pallava King "nantippOttaraiyan of 9th C, author and date of work not known)நந்திக் கலம்பகம்
(ஆசிரியர் யார்என தெரியவில்லை)
கரியின் முதல்வனை
அரியின் மருகனை ,
உருகி நினைப்பவர்
பெருமை பெறுவரே.
நூல்
மண்டலமாய் அம்பரமாய் மாருதமாய் வார்புனலாய்
ஓண்சுடராய் ஒளிஎன்னும் ஓருருவ மென்றுருவம்
மைவடிவோ வளைவடிவோ மரகதத்தின் திகழ்வடிவோ
செவ்வடிவோ பொன்வடிவோ சிவனே நின் திருமேனி.(தரவு)
அருவரையி னகங்குழைய வனலம்பு தெரிந்தவுணர்
பொருமதில்க ளவைமூன்றும் பொன்வித்த புனிதர்க்கும்
குருமணிசே ரணிமுறுவற் குலக்கங்கை நதிபாயத்
திருமுடியைக் கொடுத்தார்க்குஞ் செம்பாகந் திறம்பிற்றே
இலகொளிய மூவிலைவே லிறைவாநின் னியற்கயிலைக்
குலகிரியும் அருமறையுங் குளிர்விசும்பும் வறிதாக
அலைகதிர்வேற் படைநந்தி யவனிநா ராயணனிவ்
வுலகுடையான் திருமுடியு முள்ளமுமே யுவந்தனையே.
பொருப்பரையன் மடப்பாவை புணர்முலையின் முகடுதைத்த
தெருப்புருவம் வௌியாக நீரணிந்த வரைமார்ப
பருப்புரசை மதயானைப் பல்லவாகோ னந்திக்குத்
திருப்பெருக வருளுகநின் செழுமலர்சே வடிதொழவே.(தாழிசை)
செழுமலர் துதைதரு தெரிகணை மதனன
தெழிலுடல் பொடிபட வெரிதரு நுதலினை
அருவரை யடியெழ முடுகிய வவுணன
தொருபது முடியிற வொருவிர னிறுவினை.(அராகம்)
வீசிகையிற் கொன்றையும் வெள்ளெருக்கும் விராய்த்தொடுத்த
வாசிகையி னூடேவெண் மதிக்கொழுந்தைச் சொருகினையே
பாய்புலியி னுரியசைத்த பலபுள்ளிப் படிவமெலாம்
ஆயிரவாய் கருங்கச்சை யனலுமிழ வசைத்தனையே
சோர்மதத்த வார்குருதி சோனைநீ ரெனத்துளிப்ப
வேர்மதத்த கரியுரிவை யேகாச மிட்டனையே. (தாழிசை)
திசைநடுங்கத் தோன்றிற்று நீயுண்ட திறனஞ்சம்.
உயிர்நடுங்கத் தோன்றிற்று நீயுதைத்த வெங்கூற்றம்.(அம்போதரங்கம்)
அனைத்துலகிற் பிறப்புநீ, அனைத்துலகி லிறப்புநீ,
யனைத்துலகிற் றுன்பமுநீ, அனைத்துலகி லின்பமுநீ,
வானோர்க்குத் தாதையுநீ, வந்தோர்க்குத் தந்தையுநீ,
யேனோர்குத் தலைவனுநீ, யெவ்வுயிர்க்கு மிறைவனுநீ.(அம்போதரங்கம்)
எனவாங்கு,(தனிச்சொல்)
ஒருபெருங் கடவுணிற் பரவுது மெங்கோன்
மல்லை வேந்தன் மயிலை காவலன்
பல்லவர் தோன்றல் பைந்தார் நந்தி
வடவரை யளவுந் தென்பொதி யளவும்
விடையுடன் மங்கல விசயமு நடப்ப
வொருபெருந் தனிக்குடை நீழல்
அரசு வீற்றிருக்க வருளுக வெனவே.(சுரிதகம்)
மண்டலமாய் . . . . . . . திருமேனி
எனதே கைவளையும் என்னதே மன்னர்
சினவேறு செந்தனிக்கோ னந்தி - யினவேழங்
கோமறுகிற் சீறிக் குருக்கோட்டை வென்றாடும்
பூமருகிற் போகாப் பொழுது.
பொழுதுகண் டாயதிர் கின்றது போகநம் பொய்யற்கென்றுந்
தொழுதுகொண் டேனென்று சொல்லுகண் டாய்தொல்லை நூல்வரம்பு
முழுதுகண் டானந்தி மல்லையங் கானல் முதல்வனுக்குப்
பழுதுகண் டாயிதைப் போய்ப்பகர் வாய்சிறைப் பைங்குருகே.
குருகுதிர்முன் பனிக்கொதிங்கிக் கூகங் கங்குற்
யருகுபனி சிதறவர வஞ்சு வாளை
திருகுசினக் கடக்களிற்றுச் செங்கோ னந்தி
சுரிகைவினைப் பகைஞருட றுண்டமாகத்
தொண்டை வேந்தன் சோணாடன் தொன்னீ ரலங்கன் முந்நீருங்
கொண்ட வேந்தர் கோனந்தி கொற்ற வாயின் முற்றத்தே
விண்டவேந்தர் தந்நாடும் வீரத் திருவு மெங்கோனைக்
கண்டவேந்தர் கொண்மின்கள் என்னும் கன்னிக் கடுவாயே.
கடுவா யிரட்ட வளைவிம்ம மன்னர் கழல்சூட வங்கண் மறுகே
அடுவார் மருப்பி னயிரா வதத்தின் அடுபோர் செய் நந்தி வருமே
கொடுவார் புனத்து நகுவார் படைக்கண் மடவா ரிடைக்குண் மனமே
வடுவா யிருக்க மகளேயிம் முன்றின் மணியூச லாடன் மறவே.
மறமத கரிதிசை நிறுவின மணிநகை யவர்மன நகுவன
விறலர சர்கண்மன நெகிழ்வன விரைமலர் களிமுலை பொருவன
திறலுடை யன்தொடை புகழ்வன திகழொளி யனபுகழ் ததைவன
நறுமல ரணியணி முடியன நயபர நினதிரு புயமதே.
புயங்களிற் பூவைமார் பொங்கு கொங்கையின்
நயங்கொளத் தகுபுகழ் நந்தி கச்சிசூழ்
கயங்களிற் கடிமலர் துழாவிக் காமுகர்
பயங்கொளப் புகுந்தது பருவ வாடையே.
வாடை நோக வீசு மால மாறன் வாளி தூவுமா
லாட லோத மார்க்கு மாலே னாவி காக்க வல்லனோ
வேடு லாவு மாலை சேதி ராசன் மல்லை நந்திதோள்
கூடினால லர்வ ராதுகொங்கு விம்மு கோதையே.
கோதை சோரிற் சோர் கொங்கை விம்மில் விம்மு குறுமுறுவற்
சோதி வெளுக்கில் வெளுமருங்குல் துவளி னீயுங் துவள்கண்டாய்
காது நெடுவேற் படைநந்தி கண்டன் கச்சி வளநாட்டு
மாத ரிவரோ டுறுகின்றாய் வாழி மற்றென் மடநெஞ்சே.
நெஞ்சாகுல முற்றிங னேமெலிய நிலவின் கதிர் நீளெரி யாய்விரியத்
தூஞ்சாநய னத்தொடு சொருமிவட் கருளாதொழி கின்றது தொண்டைகொலோ
செஞ்சாலி வயற்படர் காவிரிசுழ் திருநாடுடை நந்தி சினக்கலியின்
வெஞ்சாயன் மறைத்த தனிக்குடையான் விடைமண்பொறி யோலை விடேல்விடுகே.
விடுதிர்கொல் லோவள நாடுடை வீரரசற்கு முன்னின்
றிடுதிர்கொல் லோபண் டிறுக்குந் தீறையெரி கானத் தும்மை
யடுதிர்கொல் லோதிற னந்தியங் கோனயி ராவதத்திற்
படுதிர்கொல் லோபடை மன்னீரென் னாமுங்கள் பாவனையே.
வனைவார்குழல் வேணியும் வாடைகணீர்
நனைவார் துகிலுமிவை நாளுமிரா
வினைவார்கழ னந்திவி டேல்விடுகின்
கனைவார்முர சொத்தது காரதிர்வே.
அதிர்குரல மணிநெடுந்தே ரவனிநா ரணன்களிற்றில்
கதிரொளிய வெண்மருப்புக் கனவயிரஞ் செறிந்ததான்
மதுரைகொலோ வடுபுலிக்கோ னகரிகொலோ மாளிகை சாய்ந்
தெதிரெதிரே கெடநின்ற தெவ்வூர்கோ லறியோமால்.
ஓம மறைவாண ரொண்பொற் கழல்வேந்தர்
தாம முடிக்கணிந்த தாளிப்புற் - கோமறுகிற்
பாவடிக்கீழ்ப் பல்யானைப் பல்லவர்கோ னந்திதன்
சேவடிக்கீழ்ச் காணலாஞ் சென்று.
சென்றஞ்சி மேற்செங்கண் வேழஞ் சிவப்பச் சிலர் திகைப்ப
வன்றுஞ் சினத்தா ரினமறுத் தார்போலு மஃதஃதே
குன்றஞ்செய் தோணந்தி நாட்டங் குறிகுருக் கோட்டையின்மேற்
சென்றஞ்சப் பட்டதெல் லாம்படு மாற்றலர் தின்பதியே.
பதிதொறு புயல்பொழி தருமணி பணைதரு பருமணி பகராநெற்
கதிர்தொகு வருபுனல் கரைபொரு திழிதரு காவிரி வளநாடா
நிதிதரு கவிகையு நிலமக ளுரிமையு மிவையிவை யுடைநந்தி
மதியிலி யரசர்நின் மலரடி பணிகிலர் வானக மாள் வாரே.
ஆட்குலாங் கடற்படை யவனிநாரணன்
றோட்குலா மதுமலர்த் தொண்டை வாய்ச்சியர்
வாட்குலாங் கண்ணினால் வளைத்த மம்மர்நோய்
மீட்கலா மடல்கையில் விரவு மாயினே.
விரவாத மன்னரெல்லாம் விண்ணேற வெள்ளாற்று வெகுண்டோன் றொண்டைக்
கிரவாத பரிசெல்லா மிரந்தேற்றும் பாவைமா ரெல்லீர் வாடை
வரவாதை யுற்றிருந்து வருந்துவார் பலரென்னும் வாழி வாழி
பரவாதை நந்திசெங்கோ லுதுவாகி லதுபார்க்கும் பரிசு நன்றேர.
நன்றுந்நெடி தாயவிர் கின்றதிரா நலிகின்றது மாருத சாலமெனக்
கென்றின்னில வென்னு மிளம்பிறையு மெரியேசொரி கின்றதி யாதுசெய்கோ
அன்றிந்நில மேழு மளந்தபிரான் அடலுக்ரம கோப னடங்கலர்போல்
இன்றென்னுயி ரன்னவன் கொங்கையைவிட் டெங்ஙன்றுயில் கின்றன னேழையனே.
ஏழை மார்துணை
வாழி நந்திதண்
நீழல் வெண்குடை
யூழி நிற்கவே.
நிற்க மன்னவர் நிரந்த வெண்குடை மிடைந்த நீள்கடை நெடுந்தகை
விற்கொ ணன்னுதன் மடந்தை மார்மிக முயங்கு தோளவனி நாரணன்
கற்கொள் வார்மதிற் கச்சி நந்தி நலங்கொ ளன்னவ னலங்கன்மே
லொற்க மென்மக ளுரைசெய் தோவுல களிப்ப னித்திற னுரைத்திடே.
உரைவரம் பிகந்த வுயர்புகழ்ப் பல்லவன்
அரசர் கோமா னடுபேர் நந்தி
மாவெள் ளாற்று மேவலர்க் கடந்த
செருவே லுயர்வு பாடினன் கொல்லோ
நெருநற் றுணியரைச் சுற்றிப்
பரடு திறப்பத் தன்னாற் பல்கடை
திரிந்த பாண னறுந்தார்ப் பெற்றிக்
காஅர் தளிர்த்த கானக் கொன்றையின்
பதுப்பூ பொலன்கல னணிந்து
விளங்கொளி யானன னிப்போ
திடங்களி யானை யெருத்தமிசை யன்னே.
அன்ன மடமயிலை யாளி மதயானை நந்தி வறியோர்
சொன்ன பொருணல்கு வள்ள றொசுநீர தொண்டை வளநாட்
டன்ன நடையாளை யல்குல் பெரியாளை யங்கை யகல்வான்
மின்னை மெலிவாளை நுலி னிடையாளை நேர்வ மயிலே.
மயில்கண்டால் மயிலுக்கே வருந்தி யாங்கே
குயிற்கணடாற் குயிலுக்கே குழைதி யாகிற்
எயில் கெண்டான் மல்லையங்கோ னந்திவேந்த
அயில் கொண்டான் காவிரிநாட் டன்னப்பேடை
நுற்க டற்புல வன்னுரை வெண்டிரை
நாற்க டற்கொரு நாயக நந்திதன்
கோற்க டைற்புரு வந்துடிக் குந்துணை
வேற்க டற்படை வேந்தர்தம் வீரமே.
வீர தீரநல் விறலவிர்கஞ்சுகன் வெறியலூர்ச் செருவென்றோன்
ஆர்வ மாவுள நின்றவ ரன்றிமற் றவன்பெருங் கடைநின்ற
சேர சோழருந் தென்னரும் வடபுலத் தரசருந் திறைதந்த
வீர மாமத கரியிவை பரியிவை யிரவலர் கவர்வாரே.
கவரிச் செந்நெற் காடணி சோலைக் காவிரி வளநாடன்
குமரிக் கொண்கன் கங்கை மனாளன் குரைகழல் விறனந்தி
அடியிற் றெள்ளாற் றஞ்சிய நெஞ்சத் தரசர்கள் திரள்போகும்
இவரிக் கானத் தேகிய வாறென் னெழினகை யிவனோடே.
ஓடரிக்கண் மடநல்லீர் ஆடாமோ வூசல்
ஆடகப்பூண் மின்னாட வாடாமோ வூசல்
கூடலர்க்குத் தெள்ளாற்றில் விண்ணருளிச் செய்த
காடவற்கு முன்தோன்றல் கைவேலைப் பாடிக்
ஊசல் மறந்தாலு மொண்கழ லம்மானை
வீசன் மறந்தாலு மெல்லிய வென்பேதை
கூச லிலங்கிலைவேற் பொற்கழற் னந்திநின
பாசிலை யந்தொண்டை யல்லது பாடாளே.
பாடிய நாவலரோ வேந்தரோ பல்புரவிப்
பீடியன் மாகளிற்றார் பிச்சத்தார் - கூடார்
படையாறு சாயப் பழையாறு வென்றான்
கடையாறு போந்தார் கலந்து.
கலங்கொ ளலங்கல் வேனந்தி கச்சி நாட்டோ னவன்கழல்
புலங்கொ ளொளிய நல்லோர்க்கும் புகல்கின் றோர்ற்கும் பொன்னாரம்
நலங்கொண் முறுவன் முகஞ்சாய்த்து நாணாநின்று மெல்லவே
விலங்கல் வைத்த மின்னோக்கின் மேலுமுண்டோ வினையேற்கு.
வினையன் சிலம்பன் பரிவு மிவடன் மெலிவு மென்பூந்
தினையும் விளைந்து வாழிதன் மீறுதெள் ளாற்றுநள்ளார்
முனையுமன் றேக முனிந்தபி ரான்முனையிற் பெருந்தேன்
வனையும் வடவேங் கடத்தார்தண் சாரலின் வார்புனமே.
புனத்து நின்ற வேங்கைமேற் புகைந்தெ ழுந்த வானையின்
சினத்தை யன்றொ ழித்தகைச் சிலைக்கை வீரர் தீரமோ
மனத்து ணின்ற வெஞ்சினம் மலைத்தல் கண்ட திர்ந்தமான்
வனத்த கன்ற திர்ந்ததோ நந்தி மல்லை யார்ப்பதே.
ஆர்க்கின்ற கடலோத மார்க்கு மாறும்
கூர்க்கின்ற விளமதியங் கூர்க்குமாறும்
போர்க்கின்ற புகர்முகத்துக் குளித்த வாளி
பார்க்கொன்று செந்தனிக்கோற் பைந்தார் நந்தி
ஞான்ற வெள்ளருவி யிருவி யெங்கள்பொற்
றோண்டல் வந்திடிற் சொல்லுமி னொண்சுடர்
போன்ற மன்னவ னந்திதன் பூதரத்
தீன்ற வேங்கை யிருங்கணிச் சூழ்ச்சியே.
சூழிவன் யானையின் பிடர்படு சுவடிவை சுவட்டின்கீழ்
வாழி யிந்நில மன்னவர்வந் தனுதினம் இறைஞ்சிய வடுகண்டோம்
ஆழி மன்னவ வன்னைய ராய்ச்சியா அடுங்கயிற் றடிபட்ட
பாழி மன்னெடுந் தோள்வடுக் கண்டிலம் பல்லவ பகர்வாயே.
பகரங்கோ ணெடுந்திவலை பனிவிசும்பித்
மகரங்கொள் நெடுங்கூல வரைதிரித்த
சிகரங்கள் போன்மடியத் தெள்ளாற்றுக்
நகரங்கைப் படுத்தபிரா னந்திநர
நங்கள்கோத் தொண்டை வேந்தன்
தங்கள்கோ னங்க நாடன்
திங்கள்போற் குடையி னீழற்
எங்கள்கோல் வளைக ணில்லா
ஆறா விறலடு போர்வன்மை யாலம ராடியப்பாற்
பாறார் களிற்றுயர் பல்லவர் கோனந்தி மல்லையன்றிக்
கூறா ளிவிளிளங் கொங்கை யவன்வளர் தொண்டையல்லால்
நாறா திவடிரு மேனி நாமென்கொ னாணுவதே.
நாணா தித்திரு மடவார் முன்புநி
பூணா கத்தொளிர் பொலனா கச்செய்த
வாணா ளைச்சுளி களியா னைப்படை
கோணா மைக்கொருகுறையுண் டோவுரை
செங்கோல் வளைக்கை யிவளுந் துவண்டு
அங்கோல் வளைக்கை யிளையா ரிழப்ப
தங்கோல் வளைத்த திகழ்சேரர் சோழர்
வெங்கோ னிமிர்த்த வரையுஞ் சிவந்த
மொழியார் தொண்டைப் பன்மலர் முற்றுந் தெருவந்து
விழியா ளென்றும் மேனி வெளுத்துற மெலிவாளே
ஓழியா வண்கைத் தண்ணரு ணந்தித னூர்மட்டோ
வழியாம் தமரக் கடல்வட் டத்தொரு வண்கோவே.
ஓருகோமக னந்தி யுறந்தையர்கோ
குருகோடு வயற்படர் காவிரியிற்
பெருகோடு நெடுங்கழி சூழ்மயிலைப்
தருகோதை நினைந்தயர் வேன்மெலியத்
மதிய மெரிசொரியு மாலையம் மாலை
கதிர்செய் யணிவண்டு காந்தாரம் பாடக்
பதியின் வளர்ந்தநறுந் தொண்டையங்கோ னந்தி
விதியின் விளைவுகண் டியாமிருப்ப தல்லால்
மாட்டாதே யித்தனைநாண் மானந்தி வான்வரைத்தோள்
பாட்டாதே மல்லையர் கோன் பரியானைப் பருச்சுவடு
காட்டாதே கைதைப் பொழிலுலவுங் காவிரிநீர்
ஆட்டாதே வைத்தென்னை யாயிரமுஞ் செய்தீரே.
செய்ய வாய்மிகக் கரியகண் வனமுலை
பைய சாலவு மவிரிழை யல்குலம்
வெய்ய வெப்பவி யாதகுஞ் சரநந்தி
நைய நாமிவ னகரிகை தொழிதிலம்
அளவுகண் டாற்குடங் கைத்துணைபோலு மரசர்புகும்
வளவுகண் டானத்தி மானோதயன்வையந் தன்னின்மகிழ்
தளவுகண் டாலன்ன வெண்ணகை யாற்றமியே னதுள்ளங்
களவுகண் டார்முகத் துக்கண்க ளாய கயற்குலமே.
குலமரபு மொவ்வாது பயின்றுவந்த
சிலவளவுஞ் சிந்தியாத் தெவ்வர் தேயத்
புலவரசைப் புறங்கண்ட புகழ்சேர் கோவே
சொலவரிய திருநாம முனக்கே யல்லாற்
கோவே மாலை மாலையாக் கோவே வண்டு நீலவெரண்கண்
கோவே மாலை மாலையாக் கொண்டால் கூறு மாறறியேன்
கோவே மாலை நீண்முடியார் கொற்ற நந்தி கச்சியுளார்
கோவே மாலை யுள்ளுமெங்கள் கோவே கொம்ப ரானாரே.
ஆகிடுக மாமை யணிகெடுக மேனி
போசிடுக சங்கு புறகிடுக சேரி
னாகிடறு கானல் வளமயிலை யாளி
யேகொடி யனாக விவையியையும் வஞ்சி
உளமே கொடிமருங் குண்டில்லை யென்னில்
இளமுலைக ளெவ்வா றிருக்குங் - கிளிரொலிய
தென்னிலைவேற் கண்ணினா டெள்ளாற்றில் வென்றகோன்
தன்மயிலை யன்னாள் தனக்கு.
தனக்குரிய வென்கொங்கை தன்பயந்த
எனக்குரிய வரைமார்ப மெங்கையர்க்கே
சினக்கரியும் பாய்மாவுந் தெள்ளாற்றிற்
மனக்கினியா னவனிட்ட வழக்கன்றோ
தார்வட்டக்கிளி மருவுஞ் சொற்பகர்
றேர்வட் டத்தனி மதிவெள் ளிக்குடை
போர்வட் டச்சிலை யுடைவாள் பற்றிய
பார்வட் டத்தினி மதயா னைப்படை
அடலேறு வலத்துயர் வைத்தபிரான்
மடலேறிட வாகை புனைந்தபிரான்
பெடையேறு நெடுங்கழி சூழ்மயிலைப்
மிடலேறிய கோதை நினைந்தயர்வாள்
மலர்ச்சூழ லமர்ந்தினிய வண்டார்க்குங் காலம்
சிலர்க்கெல்லாஞ் செழுந்தென்ற லமுதளிக்குங் காலந்
பலாக்கெல்லாங் கோனந்தி பன்மாடக் கச்சிப்
அலர்க்கெல்லா மைங்கணைவே ளலர்தூற்றுங் காலம்
காலவினை வாணர்பயில் காவிரிநன் னாடா
ஞாலமொரு கோலினி னடாவுபுகழ் நந்தி
நீலமயில் கோதையிவள் நின்னருள்பெ றாளேற்
கோலவளை கோடலிது மன்னர்புக ழன்றே.
புரவல னந்தி யெங்கள் பொன்னிநன் னாட்டு மன்னும்
வரமயில் போற்று சாயல் வாணுதற் சேடி காணுங்
குரவலர் பொழிலிற் கோலக் கோட்டிடை யில்லை யாகில்
இரவலர் மலர்க ளெங்கு மில்லையோ நல்கு வேனே.
நல்கு நந்தியிந் நானிலங் காவலன்
மல்கு வெண்குடைப் பல்லவர் கோளரி
மெல்கு தொண்டையுந் தந்தருள் கிலன்விடை
அல்லி னோடும்வெண் டிங்களி னோடுமுளன்
அறம் பெருகுந் தனிச்செங்கோன் மாயன்றொண்டை
மறிந்துளதே பவளவாய் மருங்கி லாடும்
நெறிந்துளதே கருங்குழலங் குவளை கண்க
செறிந்துளவே முலைசிலையே புருவ மாகி
திருவின் செம்மையு நிலமக ளுரிமையும்
பொதுவின்றி யாண்ட பொலம்பூட் பல்லவ
தோடுணை யாக மாவெள் ளாற்று
மேவலர்க் கடந்த வண்ணா னந்திநின்
றிருவரு நெடுங்கண் சிவக்கு மாகிற் 5
செருநர் சேரும் பதிசிவக் கும்மே
நிறங்கிளர் புருவந் துடிக்கி னின்கழ
லிறைஞ்சா மன்னர்க் கிடந்துடிக் கும்மே
மையில் வாளுறை கழிக்கு மாகி
னடங்கார் பெண்டிர் 10
பூண்முலை முத்தப் பூண்கழிக்கும்மே
கடுவாய் போல்வளை யதிர நின்னொடு
மருவா மன்னர் மனந்துடிக் கும்மே
மாமத யானை பண்ணி
னுதிர மன்னுநின் னெதிர்மலைந் தோர்க்கே. 15
ஓராதே யென்மகளைச் சொன்னீரே தொண்டைமேற்
பேராசை வைக்கும் பிராயமோ - நேராதார்
ஆன்வலியாற் கொண்ட வகன்ஞால மத்தனையுந்
தோள்வலியாற் கொண்ட துயக்கு.
துயக்குவித் தான்றுயில் வாங்குவித் தான்றுயில் வித்திவளை
வயக்குவித் தானுள்ளம் வஞ்சனை யான்மலர்க் காகவகத்து
முயக்குவித் தான்றுகில் வாங்குவித் தான்முன நின்றிவளை
மயக்குவித் தானந்தி மானோ தயனென்று வட்டிப்பனே.
வட்டன்றே நீரிதனை மிகவுங் காண்மின்
றிட்டன்றே பழம்பழுப்பித் துண்ணக் காண்மின்
றட்டன்றே பொன்றும்வகை முனிந்த நந்தி
குட்டன்றே மழைநீரைக் குடங்கை கொண்டு
குடக்குடை வேந்தன்றென் னாடுடைமன்னன் குணக்கினொடு
வடக்குடை யானந்தி மானோ தயனிந்த வையமெல்லாம்
படக்குடை யேந்தி பல்லவன் றன்னொடும் பாரறியத்
துடக்குடை யாரையல் லாற்சுடு மோவிச் சுடர்ப்பிறையே.
பிறைதவழ் செஞ்சடைப் பிறங்க னாணரன்
அறைகழன் முடித்தவ னவனி நாரணன்
நறைகெழு தொண்டையோன் றொண்டை கண்டபின்
இறைகெழு சங்குயி ரிவளுக் கீந்ததே.
ஈகின்றது புனமுந்தினை யாமும்பதி புகுநா
ளாகின்றது பருவம்மினி யாகும்வகை யறியேன்
வாழ்கின்றதோர் புகழ்நந்திதன் வடவேங்கடமலைவாய்த்
தேய்கின்றதொ குருவத்தோடு திரி வாரது திறமே.
திறையிடுமி னன்றி மதில்விடுமி னுங்கள்
மறைவிடுமி னித்த வவனிதனி லெங்கு
நிறைவிடுமி னந்தி கழல்புகுமி னுங்க
துறைவிடுமி னன்றி யுறைபதிய கன்று
அரிபயி னெடுநாட்டத் தஞ்சன முழுதூட்டிப்
புரிகுழன் மடமானைப் போதர விட்டாரார்
நரபதி யெனுநந்தி நன்மயி லாபுரியில்
உருவுடை யிவடாயார்க் குலகொடு புகையுண்டோ.
பகையின்றி பார்காக்கும் பல்லவர்கோன் செங்கோலி
னகையும்வாண் மையும்பாடி நன்றாடு மதங்கிக்குத்
தகையுநுண் ணிடையதிரத் தனபார மவற்றோடு
மிகையொடுங்கா முன்னிக்கூத் தினைவிலக்க வேண்டாவோ.
வேண்டா ரெண்ணும் வேந்தர் பிராற்கே மெய்யன்பு
பூண்டா ணங்கா யன்றிவ ளென்றாற் பொல்லாதோ
மூண்டார் தெள்ளாற் றுள்ளே மூழ்க முனிவாறி
மீண்டா னந்திக் கென்மக டோற்கும் வெண்சங்கே.
வெண்சங் குறங்கும் வியன்மாதர் முற்றத்து விடியவேவான்
வண்சங் கொலிப்ப மடவார்கள் விளையாடு மல்லை வேந்தன்
தண்செங்கோ னந்தி தனிக்கு டைக்கீழ் வாழாரிற்
கண்சிம் புளியாரோ யாமோ கடவோமே.
கடற்கூதிர் மொய்த்த கழிப்பெண்ணை நாரை
மடற்கூறு தோறு மலிமல்லை கங்குல்
அடற்கூடு சாவே யமையா தவர்வை
திடற்கூறு வேனுக் கேதாவி யுண்டோ.
உண்டிரையிற் செங்கழுநீ ரிலஞ்சி மாடே
தண்டலையிற் பூங்கமுகம் பாளை தாவித்
விண்டொடுதிண் கிரியளவும் வீரஞ் செல்லும்
திண்டறுகண் மாத்தொழுத பாவை மார்க்குச்
பட்ட வேந்தர்தம் பூணொடும் பாவைமார்
வட்ட வெஞ்சிலை நாணிடக் கழித்தவன்
விட்ட கூந்தலும் விழியுநன் முறுவலு
மிட்ட பொட்டினொ டிளமுலைப் போகுமு
ஆகாதுபோக மயில்விளைத் தகன்ற லவன்கை
போகாத சங்கு மருளாள . . . . . .
. . . . . . . . . . . . . .
. . . . . . . . . . . . . .
அம்பொன்று வில்லொடித னாணறுத
வம்பொன்று குழலாளை மணம்பேசி
செம்பொன்செய் மணிமாடத் தெள்ளாற்றி
கொம்பன்றோ நந்குழடிற் குறுங்காலு
பாவையர் பரிந்து தாங்கும் பனிமலர் செறிந்த செந்திற்
கோவையெய் நந்தி காக்கும் குளிர்பொழில் கச்சி யன்னாள்
பூவையம் பந்துந் தந்து புல்லினா ளென்னை யென்னே
மாவியல் கானம் போந்த தறிகிலேன் மதியி லேனே.
நீண்டதாங் கங்கு லெங்கு நிறைந்ததாம் வாடை பொங்கி
மூண்டதா மதியி னோடே முயங்குதார் வழங்கு தெள்ளாற்
றீண்டினார் பரியுந் தேரு மிருகை வென் றொருகை வேழந்
தூண்டினா னந்தி யிந்தத் தொண்டைநாடுடைய கோவே.
கோலக்கொடி யன்னவர் நீள்செறுவிற்
காலைப்பொழு தின்னெழு கன்னியர்தங்
மாலத்தெள் ளாறெறிந்த மானோதயன் குடைக்கீழ்
கொம்புயர் வாமை நாக மெதிர்வந்த நந்தி
தம்பிய ரெண்ண மெல்லாம் பழுதாக வென்ற
செம்பியர் தென்னர் சேர ரெதிர்வந்து மாயச்
வம்புயர்தொண்டை காணு மடமாதர் தங்கை
வலம்வரு திகிரியு மிடம்வரு பணிலமு
மழைதவழ் கொடிபோலக்
குலமயில் பாவையு மெறிகடல் வடிவமு
மிவையிவை கொண்டாயே.
கொண்ட லுறும்பொழில் வண்டின மாமணி
வண்ட லிடுங்கடன் மல்லைகா வலனே
பண்டை மராமர மெய்தபல் லவனே
தொண்டை யொற்றுவ ளிவடோள் வளையே.
தோளான் மெலியாமே யாழ்கடலாற் சோராமே
வாளா பெறலாமே வாயற்றீர் - கேளாதார்
குஞ்சரங்கள் சாயக் குருக்கோட்டை யத்தனையும்
அஞ்சரங்க ளார்த்தா னருள்.
அருளான தெங்கையர்கே யன்னாயென்
றெருளாமே னல்குநந்தி தெள்ளாற்றிற்
இருளான மதகரியும் பாய்மாவு
மருளாமே நன்கடம்பூர் வானேற
ஏறு பாய விளைவித்த தெல்லாம் வார்க்குங் குமக்கொங்கை
வீறு பாயக் கொாடுக்கின்ற விடலை யார்கோ வென்கின்றீர்
மாறு பாயப் படைமன்னர் மாவுந்தேருந் தெள்ளாற்றி
லாறு பாயச் சிவந்ததோ ளிணைகா விரிநா டாள்வானே.
ஆயர் வாய்க்குழற் காற்றுறு கின்றிலள்
ஏயு மாங்குயிற் கென்னைகொ லாவதே
தேய மார்புகழ்த் தேசபண் டாரிதன்
பாயன் மேல்வரல் பார்த்துநின் றாளுக்கே.
துளவுகண் டாய்பெறு கின்றிலஞ் சென்றினிச் சொல்லவல்ல
வளவுகண் டாய்வந்த தாதிகண் டாயடல் வேழமுண்ட
விளைவுகண் டாலன்ன மேனிகண் டாய்விறன் மாரன்செய்த
களவுகண் டாய்நந்தி மல்லையங் கானற் கழிக்கம்புளே.
(88 ஆம் பாடலுக்கு மேல் சிதைந்தன போலும். கிழ் வருவனவும் அந்தாதித் தொடையில் அமைய வில்லை)
பல சுவடிப்படிகளில் கூடுதலாகக் காணப்பட்டவை
என்னையா னேபுகழ்ந்தே னென்னாதே யெப்புவிக்கு
மன்னர்கோ னந்தி வரதுங்கன் - பொன்முடியின்
மேல்வருடுந் தொண்டை விரைநாறு மின்னமுமென்
கால்வருடுஞ் சேடியர்தங் கை.
கைக்குடமி ரண்டுங் கனகக்கும் பக்குடமும்
முக்குடமுங் கொண்டான் முறியாதோ - மிக்கபுகழ்
வேய்க்காற்றி னால்விளங்கும் வீரநந்தி மாகிரியி
லீக்காற்றுக் காற்றா விடை.
இந்தப் புவியி லிரவலருண் டென்பதெல்லா
மந்தக் குமுதமே யல்லவோ - நந்தி
தடங்கைப்பூ பாலன்மேற் றண்கோவை பாடி
யடங்கப்பூ பாலரா னார்.
அடி விளக்குந்துகி லாடை விளக்கு மரசர்பந்திப்
பிடிவிளக் குமெங்க ளுரார்விளக்கும் பெரும்புகழாற்
படிவிளக் குந்நந்தி யெங்கோன் பெரும்படை வீட்டுக் கெல்லாம்
விடிவிளக் கும்மிது வேநாங்கள் பூண்பதும் வெண்முத்தமே.
ஏம வரைசலிக்கு மேழாழி யுங்கலங்குங்
காம வயிரி களங்கறுக்குஞ் - சோமன்
வருநந்தி யானத்து மானாரை விட்டுப்
பொருநந்தி போந்த பொழுது.
ஊரு மரவமுந் தாமரைக் காடு முயர்வனமுந்
தேரு முடைத்தென்பர் சீறாத நாணந்தி சீறியபின்
பூரு மரவமுந் தாமரைக் காடு முயர்வனமுந்
தேரு முடைத்தென்ப ரேதெவ்வர் வாழுஞ் செழும்பதியே.
திருத்தேர் புகழ்நந்தி தேசபண்டாரிதெள்ளாறை வெற்பில்
மருத்தேர் குழவிக்குக் கார்முந்து மாகின் மகுடரத்னப்
பரித்தேரும் பாகுமங் கென்பட்ட வோவென்று பங்கயக்கை
நெரித்தே வயிற்றில்வைத் தேநிற்ப ளேவஞ்சி நெஞ்சுலர்ந்தே.
சிவனை முழுது மறவாத சிந்தையான்
குவளை மலரின் மதுவாரும் வண்டுகாள்
அவனி மழைபெய் குளிர்காலம் வந்ததே
கவலை பெரிது பழிகாரர் வந்திலார்
தொடர்ந்து பலரிரந்த தொண்டையந்தார் நாங்கள்
நடந்த வழிகடொறு நாறும் - படர்ந்த
மலைகடாம் பட்டனைய மால்யானை நந்தி
முலைகடாம் பட்டசையா முன்.
நம்மாவி நங்கொழுநர் பாலதா நங்கொழுநர்
தம்மாவி நம்பால தாகுந் தகைமையினாற்
செம்மாலை நந்தி சிறுகுடிநாட் டன்னமே
தம்மாவி தாமுடைய ரல்லரே சாகாமே.
மங்கையர்கண் புனல்பொழிய மழைபொழியுங் காலம்
கொங்கைகளுங் கொன்றைகளும் பொன்சொறியும்காலம்
செங்கைமுகி லனையகொடைச் செம்பொன்பெய் மேகத்
அங்குயிரு மிடங்குடலு மானமழைக் காலம்
அன்னையருந் தோழியரு மடர்ந்துபொருங் காலம்
புன்னைகளும் பிச்சிகளுந் கங்களின்ம கிழ்ந்து
பொற்பவள வாய்திறந்து பூச்சொறியுங் காலஞ்
செந்நெல்வயற் குருகினஞ்சூழ் கச்சிவள நாடன்
மென்னையவ ரறமறந்து போனாரே தோழி
ஈட்டி புகழ்நந்தி பாணநீ யெங்கையர் தம்
வீட்டிருந்து பாட விடிவிளவுங் - காட்டிலழும்
பேயென்றாளன்னை பிறர்நரியென் றார்தோழி
நாயென்றா ணீயென்றே னான்.
கோட்டை யிடித்தகழ் குன்றாக்கிக் குன்றக ழாக்கித் தெவ்வர்
நாட்டை மிதிக்குங் கடாக்களிற றானந்தி நாட்டி னிற்பொற்
றோட்டை மிதித்தந்தத் தோட்டூடு பாய்ந்தி சுருளளகக்
காட்டை மிதிக்குங் கயற்கண்ணி யோசுரங் கால்வைப்பதே.
செந்தழலின் சாற்றைப் பிழிந்து செழுஞ்சீதச்
சந்தனமென் றாரோ தடவினார் - பைந்தமிழை
யாய்கின்ற கோனந்தி யாகந் தழுவாமல்
வேகின்ற பாவியேன் மெய்.
சதிராக நந்தி பரன்றனைக் கூடிய தையலரை
யெதிராக்கி யென்னை யிளந்தலை யாக்கியென் னங்கமெல்லா
மதிராக்கித் தூசு மழுக்காக்கி யங்கமங் காடிக்கிட்ட
பதராக்கி யென்னையும் பற்றாம லாக்கிய பாலகனே.
ஓடுகின்ற மேகங்கா ளோடாத தேரில் வெறுங்
கூடு வருகுதென்று கூறுங்கோ - ணாடியே
நந்திச்சீ ராமனுடைய நன்னகரி னன்னுதலைச்
சந்திச்சீ ராமாகிற் றான்.
மண்ணெலா முய்ய மழைபோல் வழங்குகரத்
தண்ணுலா மாலைத் தமிழ்நந்தி நன்னாட்டிற்
பெண்ணிலா வூரிற் பிறந்தாரைப் போலவரும்
வெண்ணிலா வேயிந்த வேகமுனக் காகாதே.
காவிய னந்த மெடுத்தான் மதன்கைக் கரும்பெடுத்தான்
மேவிய னந்த வனம்புகுந் தானினி வேட்டஞ்செய்வா
னாவிய னந்தமுண் டோவுயிர் தான்விட் டகலுமுன்னே
தேவிய னந்திக்கிங் காரோடி விண்ணப்பஞ் செய்குவரே.
செய்ய கமலத் திருவுக்கு முன்பிறந்த
தய்ய லுறவு தவிர்ந்தோமே - வைய
மணக்கும் பெரும்புகழான் மானபர னந்தி
யிணக்கம் பிறந்தநாளின்று.
வாரூரு மென்முலை வார்த்தைகண் டூரு மதிமுகத்தில்
வேரூரு மேனி வியன் ரூரும் விசயனுக்குத்
தேரூரு மானந்தி தேசபண் டாரிதெள் ளாறை வெற்பிற்
காரூரு குழலிக்குக் காதள வூருங் கடைக்கண்களே.
வானுறு மதியை யடைந்ததுன் தட்பம்
கானுறு புலியை யடைந்ததுன் சீற்றங்
தேனுற மலரா ளரியிடம் புகுந்தாள்
யானு மென்கலியு மெவ்விடம் புகுவோம்
கண்ணென்பது மிலையேமொழி வாயென்பது மிலையே
நண்ணும்பனை யோலைச்சுரு ளரசன்றிரு முகமோ
பண்ணும்புல வெட்டுத்திசை யேகம்பல வாணா
பெண்ணென் பவன் வயைக்கிழி தூதன் செவி அறடா
பருவ முகிலெழுந்து மழைபொழியுங் காலம்
வருவர் வருவர்என்று வழிபார்க்குங் காலம்
ஓருவர்நமக் குண்மைசொலி உரையாத காலம்
இருவரையும் இந்நிலம்விட் டழிக்கின்ற காலம்
இரும்புழுத புண்ணிற்கு இடுமருந்தோ அன்றோ
அருந்துயரம் தீர்க்கும் அனையே - பெரும்புலவர்
தன்கலியைத் தீர்க்கும் தமிழாகரன் நந்தி
என் கலியைத் தீர்ப்பா னிலன்.
This file was last revised on 25 Feb. 2002